விக்கிரவாண்டி அருகே திடீரென கெமிக்கல் லாரி தீ பிடித்து எரிந்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெமிக்கல் லாரி திடீரென தீப்பிடித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சி பெரமங்கலத்தில் இருந்து சோடியம் பை கார்பனேட் கெமிக்கல் லோடு சுமார் 15 கேன்களில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை ரெட்ஹில்ஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) கவிராஜ் (26) என்பவர் ஓட்டி வந்தார்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரி என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று லாரியில் இருந்து பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மற்றொரு டேங்கர் லாரி மீதும் தீ பரவியது.
இந்த விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விக்கிரவாண்டி காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகன்ராஜ், கவி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீப்பிடித்து எரிந்த லாரியை போராடி அணைத்தனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.