கோயில் உண்டியலை உடைத்து திருடிய இரண்டு பேருக்கு சிறை

நல்லாவூர் சாலை ஓரம் இருந்த மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-07-22 02:30 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே நல்லாவூர் புதூர் சாலை ஓரத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம நபர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கோவிலின் வெளியில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி உள்ளனர். அப்போது உண்டியலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது கோயிலில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதை பார்த்தனர்.

உடனே அவர்கள் அந்த இரண்டு வாலிபர்களை பிடித்து கோவில் அருகில் இருந்த வேப்ப மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வாலிபர்களிடம் விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமிபதி (வயது 27) ரமேஷ் (22) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இரண்டு பேர் மீதும் பல்வேறு கோவிலில் திருட்டில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News