வானூர் அருகே நித்தியானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்
தமிழகம், கர்நாடகாவில் இருந்து காணாமல் போன நித்தியானந்தாவுக்கு வானூர் அருகே சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பெரம்பை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். நித்யானந்தாவின் தீவிர சீடர். இவர் மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் இருப்பது போல் இங்கு 27 அடி உயரத்தில் முருகன் சிலையுடன் கூடிய கோவில் கட்டியுள்ளார். இதுதவிர கோவிலின் நுழைவு பகுதியில் 18 அடி உயரத்தில் கையில் சூலத்துடன் நித்யானந்தா சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முருகர், நித்யானந்தா சிலைகளுக்கு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்யப்பட்டது. விழாவில் புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனுக்கு கோவில் கட்டி, 18 அடி உயரத்தில் நித்யானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை அப்பகுதி மக்கள் மற்றுமின்றி ஏராளமான மக்கள் நேரில் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.