வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை கண்டுபிடிக்காததால் சாலை மறியல் பரபரப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தோல்வி ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்

Update: 2022-09-18 13:41 GMT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பேரங்கியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பேரங்கியூர் மேற்கு தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில்(30). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் விழுப்புரம் அருகே பிடாகத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது சதீஷ், பரத் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் நீரில் மூழ்கி மாயமான சதீஷ், பரத் ஆகிய இருவரையும் கிராம மக்கள், இளைஞர்கள் உதவியுடன் தேடினர். சில மணி நேரம் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதனிடையே, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் மீட்பதில் தீயணைப்புத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக கூறி, பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.

இன்று 2-வது நாளாக தென் பெண்ணை ஆற்றில் மாயமான இருவரையும் தீயணைப்புத்துறையினர் படகு  மூலம் தேடி வருகின்றனர். தேடுதல் பணியினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி, இலட்சுமணன், மணிக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

Tags:    

Similar News