அதிமுக எம்எல்ஏ முன்னிலையில் இரு தரப்பு வாக்குவாதம்

திண்டிவனம் தொகுதி அதிமுக எம்எல்ஏ முன்னிலையில் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-08 08:43 GMT

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனன். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதுமான இட வசதியோ, அடிப்படை வசதிேயா இல்லை என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனன் நேற்று அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவா் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.19 லட்சம் கடந்த மே மாதம் ஒதுக்கீடு செய்திருந்தார்.

மேலும் சமையல் அறை மற்றும் கழிப்பிட வசதி செய்து தருவதாகவும் கூறினார். தொடர்ந்து அங்கிருந்த மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் அலுவலர்களிடம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் குறித்த விவரங்களை கேட்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களை சேர்ந்த ஒரு தரப்பினர் பள்ளி கட்டிடம் கட்ட அதே பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள அரசு நிலத்தை தேர்வு செய்யுமாறு கூறினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கல்குவாரி குட்டை அருகே உள்ள அரசு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினர். அதற்கு எதிர்தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்த எம்.எல்.ஏ. அவர்களை சமாதானம் செய்தார்.

தொடர்ந்து பள்ளி கட்டிடம் கட்டுவது தொடர்பாக கல்குவாரி குட்டை அருகே உள்ள இடத்தை அவர் பார்வையிட சென்றார். அங்கும் இருதரப்பினரும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வேறு இடத்தை தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. அர்ஜூனன் கூறிவிட்டு அங்கிருந்த புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News