ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனை ரூ. 60 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட கீழ் புத்துபட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறுபான்மைத் துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வின்போது, சுகாதார நிலையம் கட்டமைப்பு மற்றும் மருந்துகள் இருப்பு பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் மருத்துவ உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருவதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டினார். மேலும் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திண்டிவனம் அரசு மருத்துவமனை ரூ.60 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த சட்டத்தால் மட்டும் முடியாது. மக்கள் விழிப்புணர்வு மூலமே தடுக்க முடியும் என்றார்.