குவாரி குட்டையில் மூழ்கி இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
திண்டிவனம் அருகே கல் குவாரி குட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூழ்கி இறந்ததற்கு நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்;
திண்டிவனம் அருகே தென்கலவாய் பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் மற்றும் அவர்கள் பாட்டி ஆகியோர் குவாரி குட்டையில் மூழ்கி இறந்ததற்கு உரிய நிவாரணம் வழங்க விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளனர்.
மரக்காணம் அருகே பெருமுக்கல் கிராமத்தைச் சோ்ந்த பூங்காவனம் மனைவி புஷ்பா (60). இவரது மகள் விஜயஸ்ரீ தென்களவாய் கிராமத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது கணவா் சுவாமிநாதன். இவா்களுக்கு வினோதினி (16), ஷாலினி (14) ஆகிய இரு மகள்கள் கிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர்,இவா்கள் மூவரும் திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறைக்கு பாட்டி புஷ்பா வீடு உள்ள பெருமுக்கல் வந்த அவர்கள், அங்கு உள்ள பயன்படாத அரசு கல் குவாரி குட்டையில் புஷ்பா துணிகளைத் துவைத்தபோது அவா்கள் மூவரும் அங்கு குவாரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனா். அவா்கள் குட்டையில் ஆழமான பகுதிக்குச் சென்றதால் ஒருவா்பின் ஒருவராக மூவரும் நீரில் மூழ்கினா். அவா்களைக் காப்பாற்ற முயன்ற புஷ்பாவும் நீரில் மூழ்கினாா். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
இது குறித்து விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் அந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், செயல்படாத குவாரி பள்ளங்கள் அருகே மக்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது