முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும், பாமக கோரிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ஆன்லைன் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டில் 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீட்டு முறை தவறாக கடைபிடிக்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செய்த தவறுகளை திருத்தும்படி உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும் கூட, தவறுகள் களையப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், அடுத்தத் தேர்விலாவது வெற்றி பெற்று வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிரியர் பணியை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான் என்றாலும் கூட, அப்பணிக்கு புதிதாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும்பான்மையான பட்டதாரிகளின் ஆசிரியர் பணி கனவை தகர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதில்லை. ஒருவர் ஓராண்டுக்கு ஆசிரியர் பணி செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் வயது வரம்புக்கான தகுதி ஆகும்.
ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 59 வயது நிறைவடையாத உரிய கல்வித் தகுதி பெற்றுள்ள அனைவரும் இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவது தான் நியாயமானது ஆகும்.
கடந்த காலங்களில் அப்படித் தான் நடந்துள்ளது. ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மற்றும் நியமன வரலாற்றில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் நடைமுறை இப்போது தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது.
அதை அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படக்கூடாது என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.
கல்வியாளர்கள், பட்டதாரிகளின் கருத்தும் அத்தகையதாகவே இருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
தொழில்நுட்பம் மற்றும் திறன் சார்ந்த பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதை ஏற்கலாம். ஆனால், ஆசிரியர் பணி என்பது அறிவும், அனுபவமும் சார்ந்த பணியாகும். பிற அரசு பணிகளைப் போன்று ஆசிரியர் பணியில் எவரும் நேரடியாக சேர்ந்து விடுவதில்லை. தனியார் பள்ளிகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகும் தான் பெரும்பான்மையானோர் அரசு பள்ளி ஆசிரியர்களாக சேருகின்றனர்.
அதனால், 40 வயதில் அரசு பணியில் சேரும் ஆசிரியரை விட 50 வயதிலோ, 55 வயதிலோ அரசு பள்ளி ஆசிரியராக சேருபவருக்கு கூடுதல் அறிவு, அனுபவம், பக்குவம் போன்றவை இருக்கும். அது கற்பித்தலை எளிதாகவும், சுவையாகவும் மாற்றும். அதனால் ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கூடாது.
அதுமட்டுமின்றி, ஓர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டுமானால், அந்தப் பணிக்கான நியமனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் 2013, 2014, 2019 என மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளாத அரசுக்கு அதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க உரிமையில்லை; வயது வரம்பு நீக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப் பட்ட போது அதை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடுமையாக எதிர்த்தார் .
ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் 12ஆம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த வகையில் இந்த சிக்கலின் தீவிரம் அவருக்கு தெரியும் என்பதால் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியர் பணி போட்டித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை எழுப்பி உள்ளார்.