திண்டிவனத்தில் காதலிக்க மாணவியை மிரட்டிய இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் பிளஸ் டூ மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் தியாகி சண்முகபிள்ளை வீதியை சேர்ந்தவர் யாகத் அலி. அவரது மகன் அஸ்கர் (வயது22), இவர் திண்டிவனம் பகுதியைச்சேர்ந்த 16 வயது 12-ம் வகுப்பு மாணவியை பின் தொடர்ந்து வந்து உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அஸ்கர் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமி மீது மோதுவது போல் பயமுறுத்தி உள்ளார்.
மேலும் நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் உன்னை வாழ விடமாட்டேன் என மிரட்டி வந்து உள்ளார். இது பற்றி உனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அஸ்கர் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.