திண்டிவனத்தில் லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் 3 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-10-02 11:12 GMT

விபத்துக்குள்ளான லாரி.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடி, லாரி பழக்கடைக்குள் புகுந்தது; டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் நரேஷ்குமார்(வயது 26). இவர் திண்டிவனம்-செஞ்சி சாலை சந்தை மேடு பகுதியில் சாலையோரத்தில் பழக்கடை நடத்தி வந்தார்.

நரேஷ்குமார் வழக்கம்போல் பழக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து செஞ்சி மார்க்கமாக சென்ற லாரி மீது எதிர்பாரதவிதமாக திண்டிவனம் நோக்கி வந்த இன்னொரு லாரி உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய செஞ்சி நோக்கி சென்ற லாரி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி பழக்கடைக்குள் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மரக்காணம் தாலுகா பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜயகுமார்(40) படுகாயம் அடைந்தார். பழ வியாபாரி நரேஷ்குமார், பழம் வாங்கிக்கொண்டிருந்த செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பாலசுப்பிரமணியம்(வயது48) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் லாரி டிரைவர் உள்பட 3 பேரையும் மீ்ட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தகவல் அறிந்து அங்கு வந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News