செஞ்சி அருகே தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
செஞ்சி அருகே தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
செஞ்சி அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னதுரை என்பவர் ஸ்ரீ ராம் தனியார் நிதி நிறுவனத்தில் நெல் அறுவடை டிராக்டர் இயந்திரம் வாங்கினார். கடன் தவணை தவறியதால் அந்த நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக டிராக்டரை எடுத்துச் சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது விவசாயிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல முறை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் தனியார் நிதி நிறுவனங்கள் அடியாட்களைக் கொண்டு வாகனங்களை பறிமுதல் செய்து விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .அந்தத் தனியார் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் அதனுடைய மேலாளரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செஞ்சி-சேத்பட் சாலையில் வளத்தியை அடுத்த தேவனூர் கூட்டு சாலையில் சின்னதுரையின் பிரேதத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.