வெம்பாக்கம் அருகே நெல்மணிகளை ரோட்டில் கொட்டி விவசாயிகள் சாலை மறியல்

வெம்பாக்கம் அருகே நாட்டேரியில் நெல் கொள்முதல் மையம் திறக்கக்கோரி நெல்மணிகளை ரோட்டில் கொட்டி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-26 06:01 GMT

நெல் கொள்முதல் மையம் திறக்கக்கோரி நெல்மணிகளை ரோட்டில் கொட்டி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டேரி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராந்தம் - பிரம்மதேசம் சாலையில் நாட்டேரி கூட்ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர், அப்போது சாலையில் நெல்மணிகளை கொட்டி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், ''எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டுவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் அறுவடை தொடங்கிய பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. அதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகள் வீட்டிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் பாதுகாப்பாக சேமித்து வைக்க வசதியில்லாத விவசாயிகளின் நெல் மணிகள் தெருக்களில் வீட்டு வாசலிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

உரிய காலத்தில் இதனை விற்பனை செய்யமுடியாமல் போனால் நெல்மணிகள் பூச்சிகளின் தாக்குதலுக்குள்ளாகி வீணாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறக்கவேண்டும்'' என்றனர். 

அப்போது வெம்பாக்கம் வட்டாட்சியர் சத்தியன், செய்யாறு சரக காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நாட்டேரி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்தில் அரசு நேரடி கொள்முதல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்தார்.

அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். எனினும் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடிந்ததும் வாகன போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

Tags:    

Similar News