இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
இருளர் இன மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அடுத்த சின்ன ஓபுலாபுரம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 3.தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டி பல முறை வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து தரப்பு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் குடிசைவீடு கட்டி வாழ்ந்து வரும் பகுதிக்கு செல்லும் சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்து இவர்களை செல்ல விடாமல் தடுத்துத் தகாத வார்த்தைகளில் துன்புறுத்தி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இருளர் இன மக்கள் குழந்தைகளுடன் வந்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர்கள் வசித்து வரும் பகுதியில் மின்வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியைப் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளதாகவும், இருக்கும் குடிசை வீடும் இடிந்து போனதால் வாழ்வதற்கே வழியில்லாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே குடியிருக்கும் பகுதிக்குச் செல்லும் வழியை மறித்து ஒரு சிலர் பிரச்சினை செய்வதாலும், உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உடலைக் கொண்டு செல்வதிலும் சிரமம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,3 தலைமுறையாக வாழ்ந்து வரும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, இலவச வீடும் கட்டித்தர வேண்டும் என்றும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.