தேசிய பறவையான மயிலுக்கு விஷம் வைத்த விவசாயி கைது: வனத்துறையினர் விசாரணை
விஷம் கலந்த அரிசியை மயில்கள் உட்கொண்டதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து 5 மயில்கள் உயிரிழந்தன
ஆலங்காயம் அருகே நாட்டின் தேசிய பறவையான மயிலுக்கு விஷம் வைத்த விவசாயி கைது செய்து 5 மயில்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா ரெட்டி இவரது மகன் ரமேஷ் (46) .இவருக்கு சொந்தமான அதே பகுதியில் நிலம் உள்ளது. நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருக்கின்றார். மாலை நேரத்தில் காப்புக் காட்டில் இருந்து இருந்து விவசாய நிலத்திற்கு இறை தேடி மயில்கள் வந்து செல்கின்றனர்.
விவசாய நிலத்தில் மயில்கள் வந்து சேதப்படுத்துவதைத் தடுக்க நினைத்து அப்பகுதியில் அரிசியில் விஷம் கலந்து வைத்துள்ளார். நிலத்தில் மயில்கள் இறை தேடி சென்றபோது, விஷம் கலந்த அரிசியை மயில்கள் உட்கொண்டதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து 5 மயில்கள் உயிரிழந்தன.
இந்த நிலையில், உயிரிழந்த மயில்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று புதைப்பதற்காக சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்தபோது அவர் மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது..அதனை தொடர்ந்து 5 மயில்களை கைப்பற்றிய வனத்துறையினர் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
நாட்டின் தேசிய பறவையான மயிலை விஷம் வைத்துக் கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் இனி வரும் காலங்களில் பறவைகளை அழிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குசிரிலாபட்டு அருகே விவசாய நிலத்தில் வந்த மயிலுக்கு விஷம் வைத்து 7 மயில்கள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.