விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்
வாணியம்பாடியில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல். வருவாய்த்துறை நடவடிக்கை;
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் அதிக தீவிரமாக பரவி வருகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் டிஎஸ்பி பழனி செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சி.எல்.சாலை, பஷீராபாத், மலாங்ரோடு, ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அரசு அறிவித்த நேரத்தை கடந்து, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்டு இயங்கி வந்த டீக்கடை , ஸ்வீட் கடை, இறைச்சி கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை நிறுத்தி, அபராதம் விதித்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதில் வட்டாட்சியர் மோகன், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்