வாணியம்பாடியில் அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வாணியம்பாடியில் தேவையின்றி ரோட்டில் சுற்றித் திரிபவர்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் தலைமையில், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் தீவிரமாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்களை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கச்சேரி ரோடு, மேட்டுப்பாளையம், நேதாஜி நகர், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக நின்று முகக்கவசம் அணியாமல் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதனால் பல வாகனங்களில் வந்தவர்கள் பாதி வழியிலேயே திரும்பி சென்றனர், இருப்பினும் தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். அப்போது சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.