வாணியம்பாடி அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை; விடிய விடிய மக்கள் விரட்டியடிப்பு
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய காட்டுக்குள் விரட்டினர்.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மொசக்குட்டை பகுதியில் சிவசக்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், கேழ்வரகு, வாழை ஆகிய பயிர்களை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியது. மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக புதைக்கப்பட்டுள்ள குழாய்கைளயும் உடைத்து சேதப்படுத்தியது.
தகவல் தெரிவித்தும் ஆலங்காயம் வனத்துறையினர் உரிய நேரத்தில் வராததால் கிராமமக்கள் ஒன்றிணைந்து விடிய விடிய பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஒற்றை காட்டு யானை விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.