திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்து சென்ற போது, திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை சிவலிங்கம் வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
அதன்பின்னர் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதில் வடக்கு மண்டல ஐ ஜி சந்தோஷ்குமார், வேலூர் சரக டிஐஜி பாபு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கடந்த 39 வருடங்களாக நேரில் அஞ்சலி செலுத்தி வந்த தேவாரம் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக காணொளி காட்சியின் மூலம் வீரமரணம் அடைந்த 4 காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினார்
இந்த நிகழ்வில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்