திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த தாயப்பன் நகர் இரண்டாவது தெரு பகுதியில் வசிப்பவர் ஜெய சுரேஷ் (42). புகைப்பட கலைஞரான இவர் ஏற்கனவே சிவனார் தெரு பகுதியில் ஸ்டுடியோ வைத்து பணிபுரிந்த நிலையில் இடவசதி தேவை காரணமாக வேறு ஒரு கடை அமைக்க காலை 11 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வாடகைக்கு கடை தேடி அலைந்து விட்டு மீண்டும் மதியத்திற்கு பிறகு மூன்று மணி அளவில் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
வீட்டின் முன்புற கேட் கதவை திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபொழுது முகப்பு கதவின் தாழ்ப்பால் உடைந்த நிலையில் திறந்து இருந்ததால் கணவன் மனைவி இருவரும் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து பார்த்ததில் அறையில் பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதைந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் பீரோவை ஆராய்ந்து பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை மற்றும் சீட்டு கட்டி எடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதை அறிந்து செய்வதறியாது கந்திலி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உடன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.