திருப்பத்தூர்: சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை அவமதிப்பதுபோல் நடந்துகொண்ட அதிகாரி
திருப்பத்தூரில் நகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை அவமதிக்கும் வகையில் வாகனத்தின் மேல் கால் வைத்துக்கொண்டு பேசிய அதிகாரி;
திருப்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பத்தூர் 13 வது வார்டு தண்டபாணி கோயில் 2வது தெருவில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 100கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி திறந்து வைத்தார்.
ஆனால், நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் நகர பகுதிகளில் உள்ள கழிவுநீர்களை பாதாள சாக்கடை பகுதிக்கு கொண்டு செல்லாமல் 13 வார்டு பகுதி அருகாமையில் உள்ள ஏரியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், ஏரியில் கழிவுநீர் கொட்டுவதை கண்டித்து அரசு கழிவுநீர் வாகனத்தை சிறைபிடித்து திருப்பத்தூரிலிருந்து மாடப்பள்ளி வரை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் அப்பகுதி நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், அங்கு பொதுமக்களிடம் பேசுகையில் பொதுமக்களை அவமதிக்கும் வகையில் தன்னுடைய காலை இருசக்கர வாகனத்தின் மேல் வைத்துக்கொண்டு பொதுமக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மைப்படுத்த கடந்தவாரம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அப்பகுதியில் நேரடியாக குப்பை கழிவுகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பை கொட்டுவதும் கழிவுநீரை ஏரியில் கலப்பதால் தொடர்கதையாகி வருகிறது எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்