மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் முழுவதும் சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரமங்கலம் ஜோதி மங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் ஆய்வுக்கு சென்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய சத்துணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சக மாணவ மாணவியருடன் சேர்ந்து உணவருந்த தரையில் அமர்ந்த பொழுது அவருக்கு வாழை இலை வைக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் உண்ணும் தட்டை வாங்கி அதில் உணவு பரிமாற சொல்லி தட்டில் சாப்பிட்டார். பிறகு மாவட்ட ஆட்சியர் உணவு உட்கொண்ட தட்டை எடுத்துக்கொண்டு அவரே கழுவி கொடுத்தார்.
மேலும் இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக காகித கப்பல் செய்து கொடுத்து பின்பு கரும்பலகையில் ஓவியங்கள் வரைந்து அசத்தினார். மாவட்ட ஆட்சியர் சாமானிய மக்களுடன் சகஜமாக பழகும் நிகழ்வு பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ செய்தது.