ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கொள்ளைபோன வீட்டில் சோதனையிடும் தடவியல் நிபுணர்கள், போலீசார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர் பகுதியைச் சார்ந்த சதாசிவம் (45) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். சதாசிவம் மனைவி சிவகாமி(33) மற்றும் அவருடைய மகன்கள் மூன்று பேர் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகாமி பந்தரபள்ளியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு காலை 8 மணியளவில் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். அன்று மாைல சிவகாமியின் உறவினரான சரவணன், சிவகாமியின் வீட்டு வழியாக செல்லும்போது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சிவகாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்து பார்த்த சிவகாமி கேட் மற்றும் முன் கதவு இரும்பு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு சிவகாமி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.