ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பால் உற்பத்தியாளர்கள் மறியல்

ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-13 12:51 GMT

ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில்  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர்  பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சங்கத் தலைவராக செயல்பட்டு வரும் கோபு என்பவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து வருகிறார்.

இதனால், தற்போதுள்ள நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News