ஜோலார்பேட்டை அருகே ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே 2 ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்துள்ளது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.;
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த என்ஜிஓ நகர் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெங்கடேசன்(வயது 45). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற காவலர் உடற் தகுதி தேர்வுக்கு சென்றுள்ளார். அவரது மனைவி சங்கீதா (வயது 35) பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இவரது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல், அவரது வீட்டின் அருகே உள்ள நாட்றம்பள்ளி முன்னாள் வட்டாட்சியர் பிரபு கணேஷ் (வயது 60). இவருடைய தந்தை சுந்தரம் (வயது 88) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரபு கணேஷ் சென்றுள்ளார்.
பிரபு கணேசன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 47) இவர் அவருடைய வாணியம்பாடியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் தகவல் தெரிவிக்க போலீசார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்து வருகின்றனர். ஒரே தெருவில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.