விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகள்: விவசாயிகள் வேதனை
நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளதால் விவசாயிகள் வேதனை.;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கொய்யான்கொல்லை பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை ,கொள்ளு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதன் அருகாமையில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில் இரசாயன கழிவுகள் மற்றும் அகர்பத்தி தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் இரசாயன தூள்கள் என அனைத்தையும் லாரிகளில் மூட்டைகளில் கட்டி மர்ம நபர்கள் கொண்டு வந்து திறந்த வெளியில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் கழிவுகளிலிருந்து ரசாயனம் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அலட்சியத்தால், தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் இதுபோன்ற திறந்த வெளிகளில் கொட்டப்படுவதால் விவசாயிகள் பாசன வசதி பெறும் நீரின் தன்மை மாறுவதுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.