ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின் மனைவி சசிகலா (42). இவர் திருப்பத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடை திறந்து வியாபாரம் செய்து விட்டு கடையை மூடிவிட்டு பாச்சல் மேம்பாலம் வழியாக சசிகலா தனது மகள் மோனிகா உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மோனிகாவின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். சசிகலா, மோனிகா ஆகிய இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் சசிகலாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலி சரடை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். அப்போது சசிகலா மற்றும் மோனிகா ஆகிய இருவரும் கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்கு முன் மர்ம நபர்கள் வேகமாக தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்