திருச்சி: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்புலிகள் கட்சியினர் சாலை மறியல்
திருச்சியில் தமிழ் புலிகள் கட்சியினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்புலிகள் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ் புலிகள் கட்சியினர் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் ஏராளமானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.சுமார் 30 நிமிட நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்து அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது