திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார்
திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் அரசை பிரபாகரன் தலைமையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 1000 மளிகை கடைகளை திறக்க இருப்பதாகவும் மேலும் பல தொழில்கள் தொடங்க இருப்பதாகவும் அதற்காக கொஞ்சம் முதலீடு மட்டும் தேவைப்படுகிறது. அதில் பொதுமக்கள் முதலீடு செய்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியாக கொடுப்பதாக தெரிவித்ததோடு ஆயிரம் பேரிடம் தலா ரூ. 5 லட்சம் வீதம் வசூல் செய்தனர்.
இந்த தொகைக்கு மளிகை கடை அமைத்து தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. இதில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஏ.டி.எம். வசதி மற்றும் இட்லி மாவு, தோசை மாவு போன்ற அரவைக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இதற்கான பராமரிப்பினை நிறுவனமே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். மளிகைக்கடை தொடங்கி தருவதாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டு அந்த அலுவலகத்தை திடீரென மூடிவிட்டனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த நிறுவனம் திறக்கப்படவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
முதலீடு செய்த பல பேர் தற்கொலை செய்து கொண்டனர். எனவே அப்பாவி மக்களின் அசல் தொகையையாவது மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.