திருச்சியில் செவிலிய உதவியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கலெக்டரிடம் மனு
திருச்சியில் செவிலிய உதவியாளர் நல சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
செவிலிய உதவியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலிய உதவியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்க வந்தனர்.
இது குறித்து சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமப்புற சுகாதார செவிலியர் உதவியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர், ஆப்ரேஷன் டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்து வருகிறோம். தற்போது வரை அரசு செவிசாய்க்கவில்லை மேலும் கொரோனா காலங்கள் மற்றும் தேர்தல் காலங்களில் எங்கள் கோரிக்கை தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
எங்கள் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு செல்லவில்லை என்றால் செவிலிய உதவியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வருகிற நாட்களில் சென்னை தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம். அதற்கு அடையாளமாக விரைவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் .
இவ்வாறு அவர் கூறினார்.