திருச்சி: 20லட்சம் மதிப்பில் 1900 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்பு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பாலக்கரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் வாகனத்துடன் பாலக்கரை காவல்நிலையத்தில்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி மாநகரில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பாலக்கரை பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று மாலை (வியாழக்கிழமை) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் இரு வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1900 கிலோ எடைக்கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய திருவெறும்பூர் பராதிபுரம் பூமிநாதன்(39), பாலக்கரை காஜாபேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த இளங்கோ(39) ஹரிஹரன்(35), காஜாபேட்டை பென்சனர் தெரு வடிவேல்(40), அரியமங்கலம் சீனிவாச நகர் பழனிகுமார்(35) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்தியை இரு வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார். குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.