ரெம்டெசிவர் மருந்தின் காலாவதி தேதி குறித்த அச்சம் தேவையில்லை - கலெக்டர் தகவல்

ரெம்டெசிவர் மருந்தின் காலாவதி தேதி குறித்த அச்சம் தேவையில்லை என்று திருச்சி கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-10 12:30 GMT

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 300 மருந்துகள் வந்ததில் சனிக்கிழமை முதல் நாளன்று 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.உரிய தேவை உடையவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.இன்று மேலும் 300 மருந்துகள் வந்துள்ளன. இன்றும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவர் மருந்துகள் மூன்று மாதங்கள் தான் பயன்படுத்தப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.அதனை ஆய்வு செய்த பின்பு 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதார துறை அறிவித்ததை தொடர்ந்து ஏற்கனவே ஒட்டப்பட்ட காலாவதி தேதியின் மீது புது தேதி ஒட்டப்பட்டது.அது குறித்து யாருக்கும் அச்சம் தேவையில்லை.அந்த மருந்தை தயாரிப்பு நாளிலிருந்து 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 450 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன.மேலும் 200 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளது. அதே போல ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன அதுவும் மேலும் 30 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 6000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் 12 முதல் 14 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. திருச்சியில் கொரோனா காரணமாக இறந்தவர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும் இணை நோய் உள்ளவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ரெம்டெசிவர் உள்ளிட்ட எந்த மருந்தை கள்ள சந்தைகளில் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனா பரவலை குறைக்க முடியும் எனவே மக்கள் அநாவசியமாக வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டார். இவ்வாறு அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

Similar News