9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்: அமைச்சர் நேரு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.;

Update: 2021-09-19 07:30 GMT

திருச்சியில் நடந்த இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை  அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் கொரோனா   இரண்டாம் கட்ட தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி நிர்வாக  துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 82 ஆயிரத்து 553 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவரை 11 லட்சத்து 73 ஆயிரத்து 735 பேருக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று 55 ஆயிரம் பேர் இலக்காக கொண்டு 382 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய காவிரி பாலம், உயர்மட்ட பாலம், உய்யகொண்டான் கரையில் உள்ள சாலை அகலப்படுத்துதல், கோணக்கரை சாலை விரிவாக்கம் என அனைத்து பணிகளுக்குமான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கி அனைத்து பணிகளும் தொடங்கும்.

மாரீஸ் மேம்பால பணிகள் மாநகராட்சியே மேற்கொள்ள இருக்கிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தாலும், 9 மாவட்டம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும்.

தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். ஒற்றுமையாக நின்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம். கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், அப்துல் சமது, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News