திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 20 ஊராட்சிகள் பட்டியல் அறிவிப்பு
jதிருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 20 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது
திருச்சி மாநகராட்சியில் தற்போது 65வார்டுகள் உள்ளன. திருச்சி அருகில் உள்ள சில கிராமங்களை இணைத்து இந்த வார்டுகளை நூறு ஆக உயர்த்தி மாநகராட்சியின் எல்லைகள் விரிவுபடுத்தப்படும் என தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தொடரந்து மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகளின் விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து அரசின் அனுமதிக்காக அனுப்பி உள்ளனர். இதன் படி திருச்சி மாநகராட்சியுடன் மண்ணச்சல்லூர் பேரூராட்சி, மாதவ பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், தாளக்குடி, கீரமங்கலம், கூத்தூர், மதகுடி, பளையகுறிச்சி, குண்டூர், ஓலையூர், மணிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி வடக்கு, கே. கள்ளிக்குடி தெற்கு, தாயனூர், நாச்சி குறிச்சி, சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, மருதாண்டாகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரச நல்லூர் ஆகிய இருபது ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக திருச்சி மாநகராட்சி வெளியிட்டு உள்ள பட்டியலில் கூறப்பட்டு உள்ளது. மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் அமையும் எல்லைகள் அடங்கிய வரைபடத்தையும் மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.