மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு; 150 அடியில் மிக பிரமாண்ட சிலை அமைக்க முடிவு
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் மிக பிரம்மாண்ட சிலை. இந்து எழுச்சி பேரவை சார்பில் நிறுவப்பட உள்ளது.;
மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி அமைப்புக்குழு மற்றும் இந்து எழுச்சி பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்து எழுச்சி பேரவையின் தலைவரும், மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி அமைப்புக்குழு நிர்வாக அறங்காவலருமான முனைவர். பழ. சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக சிலை அமைக்க உள்ளோம். எழுச்சிக்கான சிலை என்கிற தலைப்பில் இந்த சிலையை அமைக்க உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழை பறைசாற்றும் வகையில் இந்த சிலை அமையும். மிக முக்கியமாக சர்வ சமய குருமார்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாகூர் தர்காவில் உள்ள குருமார்கள், தேவலாய பேராயர்கள் என பலரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ரூ.12 முதல் ரூ.15 கோடி மதீப்பீட்டில் அந்த சிலையை அமைக்க உள்ளோம். தமிழகம் முழுவதும் இதற்கான ரதம் ஒன்றை துவக்க உள்ளோம். மக்களிடம் நிதியும் பெற உள்ளோம். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டு காலத்தில் மா மன்னர்களின் மான்பை மறந்து விட்டோம். எனவே ராஜராஜசோழனின் மாண்பை பறைசாற்றவே இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலை அமைய உள்ள இடத்தில் கலச்சார பூங்காக்கள், அருங்காட்சியகம் போன்றவை ஏற்படுத்த உள்ளோம். முழுக்க, முழுக்க தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த இடம் அமையும் என்று தெரிவித்தார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பொது செயலாளார் சதீஷ் கண்ணா, கவுரவ தலைவர் பாரதி மோகன், மண்டல செயலாளார் ராஜா ஆனந்த், மாவட்ட செயலாளார் கமல் மற்றும் இயக்க ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.