அரசு பள்ளி என்றால் வறுமையான நிலை அல்ல, பெருமையான நிலை..! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தைரியத்துடன் புகார் அளிக்க வேண்டும். - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.;
தனியார்பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தைரியத்துடன் புகார் அளிக்க வேண்டும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பள்ளியின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் பின்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
"தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறேன். அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஜீலை முதல் வாரத்தில் முதலமைச்சரிடம் ஆய்வு கூட்டம் உள்ளது. அந்த ஆய்வு கூட்டத்தில் நான் நடத்திய ஆய்வு குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவு மாணவர்கள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 1500 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் இணைந்துள்ளார்கள். அரசு பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் அது பெருமையான நிலை என்கிற அளவில் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நேரடியாக யாரும் புகார் தெரிவிப்பதில்லை.
தைரியத்துடன் எந்த தயக்கமும் இல்லாமல் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும் அவ்வாறு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டண வசூல் தொடர்பாக தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் ஏழாண்டுகள் தான் செல்லும் என்கிற நிலை தற்போது உள்ளது. வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம் அதன்படி விரைவில் அந்த அறிவிப்பும் வெளிவரும் என்றார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.