திருச்சி தொழில் அதிபர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் டி.எஸ்.பி இன்று கோர்ட்டில் சாட்சியம்

திருச்சி தொழில் அதிபர் மற்றும் அவரது டிரைவர் காருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் டி.எஸ்.பி. இன்று கோர்ட்டில் சாட்சியம் அளிக்கிறார்.

Update: 2021-09-15 03:07 GMT
திருச்சி கோர்ட்டு (பைல் படம்(

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோர் கடந்த 22- 1- 2007 அன்று காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சவேரியார்புரம் என்ற இடத்தில் கார் எரிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் காருக்குள் கரிக்கட்டையாக கிடந்தன.

திருச்சி மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலையாளிகள் பற்றிய துப்பு எதுவும் துலங்வில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா ஆகியோரை கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .சாட்சிகள் விசாரணை தொடங்கப்பட்டு இதுவரை ஐம்பது  சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கின் 51-வது சாட்சியும் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியுமான திருச்சி மண்டல சி பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுமான மலைச்சாமி இன்று திருச்சி கோர்ட்டில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் சாட்சியம் அளிக்கிறார்.

புலன்விசாரணை அதிகாரி அளிக்கும் சாட்சியத்தை தொடர்ந்து இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நிறைவுபெறும். அதன் பின்னர் வழக்கறிஞர்கள் விவாதமும் அதனைத் தொடர்ந்து விரைவில் தீர்ப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News