திண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கு: திருச்சி கோர்ட்டில் 5 பேர் சரண்
திண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் தேடப்பட்ட 5 பேர் இன்று திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.;
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பக்கம் உள்ள மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், திண்டுக்கல் நந்தவன பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தவனப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரைவெட்டி கொலை செய்து தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து பசுபதி பாண்டியன் வீட்டு முன் போட்டுவிட்டுச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் வேடசந்தூரைசேர்ந்த ரமேஷ் குமார், சங்கிலி கருப்பன்,செம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அம்புலி பட்டியைச் சேர்ந்த முத்துமணி, நாயுடு காலனியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி ஆகிய 5 பேர் இன்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது எண் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மாஜிஸ்திரேட் உத்தரவின்படி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.