திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பூ, பழங்கள், குங்குமம், மஞ்சள், வளையல்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அமைச்சர் நேரு வழங்கினார்.
அவர்களுக்கு வளைகாப்பு விழாக்களில் வழங்கப்படுவது போல் கலவை சாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், அப்துல் சமது, ஸ்டாலின் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.