திருச்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு
திருச்சியில் நடந்து வரும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.;
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள்,வரத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் உள்ள தடைகளை அகற்றி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவற்றை தூர்வார வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாபெரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52 -வது வார்டு வயலூர் சாலையில் உள்ள கத்தரிக்காய் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும்பணி இன்று நடைபெற்றது.
பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் நடைபெற்ற இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி, பொறியாளர் சிவபாதம் ஆகியோர் உடனிருந்தனர்.