அதிமுக வேட்பாளரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்
பாண்டமங்கலம் அருகே அதிமுக வேட்பாளரை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.;
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவில், அதிமுக சார்பில் போட்டியிடும் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பத்மநாபன் உடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுக தொண்டர்கள் அப்பகுதி இஸ்லாமியர்களிடத்தில் வாக்கு சேகரிக்க வந்தனர்.
அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வேட்பாளர் பத்மநாபன் மற்றும் அமைச்சர் வளர்மதியை தெருவின் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக தொண்டர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். மேலும் வேட்பாளரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.