திருச்சியில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை முயற்சி
திருச்சியில் பெண் போலீஸ் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதற்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி பிரேமா. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து திருச்சி ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியினர் கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இருந்து தற்போது வேறு இடத்திற்கு மாற்று வேலைக்காக வந்துள்ளார். அங்கு பணி சுமை அதிகமாக இருந்ததாம்.இந்நிலையில் வீட்டிற்கு வந்த பிரேமாவின் மகன் குறும்பு செய்ததால் அதனை பிரேமா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பிரேமா வீட்டில் கதவை உள் பக்கமாக தாள் போட்டுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத பாண்டியன் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பிரேமாவை மீட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.