திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் : கலெக்டர் தகவல்
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலைத் தடுத்திடும் வகையில் மாநிலம் முழுமையும் எவ்விதத் தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மேலும் 07.06.2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது . தற்போது 14.06.2021 காலை 6 மணி வரை முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது . திருச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தொடர்புடைய அனைத்து வியாபாரிகள் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது . மேற்படி முகாமில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளவும்.
அவ்வாறு கரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்படும் போது பணிபுரிய அனுமதி மறுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்டப்படி செய்தி குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.