திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறியதாக 2000 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரில் முழு ஊரடங்கு விதிகளை மீறி, ஊர் சுற்றியதாக 2000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியது.
பொதுமக்கள் அனாவசியமாக வெளியில் வரக் கூடாது என அரசு எச்சரித்து இருந்தும், பலரும் வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்தனர். மருத்துவ தேவைக்காக மட்டுமே வெளியில் வரவேண்டும், வெளியூர் பயணங்களுக்கு இ பாஸ் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என அரசு அறிவித்து இருந்தும் சாதாரண நாட்களில் பயணிப்பது போல் திருச்சி சாலைகளில் வாகனங்கள் பயணித்து வந்தன.
காவல்துறையினரும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதுடன், சாலைகள் பலவற்றையும் தடுப்புகள் கொண்ட அடைத்தனர்.மேலும் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவரை திருச்சி மாவட்டத்தில் 8500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், திருச்சி மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் அனைத்தும் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தினால் அவை தீ பிடித்து விடாமல் இருப்பதற்காக, வஜிரா வாகனத்தைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தனர்.