டாஸ்மாக் விற்பனையாளர்கள் போராட்டம்- திருச்சியில் நடந்த செயற்குழுவில் தீர்மானம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டாஸ்மாக் விற்பனையாளர்கள் போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 18-ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபானக்கடையில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து , காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சிறப்புத்தலைவர் இரணியப்பன் கூறியதாவது
தமிழக அரசு கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றிவரும் டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சட்ட மன்றத்தில் ரூ.500 ஊதியம் உயர்த்தி அறிவித்துள்ளது ஏற்புடையதாக இல்லை. கடந்த ஆட்சியிலும், தற்போதும் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யாமல் கடைநிலையில் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என ஒருபக்கம் அமைச்சர் கூறுகிறார். டாஸ்மாக் நிர்வாக மேலாளர் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வாழ்வாதாரத்திற்கான ஊதியம் வழங்கிட வேண்டும். தற்போதைய சம்பளம் ரூ.10 ஆயிரம் போதுமானதாக இல்லை. எனவே 18 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை கொச்சைப் படுத்தும் வகையிலும், அவர்களது பணியை குறை சொல்லும் வகையில் ஆட்சியாளர்களின் செயல்பாடுஉள்ளது. ஊதிய உயர்வு, பணிவரன்முறை, காலமுறை ஊதியம் வழங்கிட கோரி விரைவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டத்திற்குட்பட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.