திருச்சியில் பெரியார் சிலைக்கு சிவா எம் .பி. மாலை அணிவித்து மரியாதை
திருச்சி கல்லூரியில் பெரியார் சிலைக்கு எம்.பி,சிவா தலைமையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் இன்று பெரியார் பிறந்த நாள் விழா முன்னாள் மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு முன்னாள் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு, கல்லூரியின் முன்னாள்மாணவரும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தலைமையில் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சிலைக்கு அருகே நின்று செல்பி எடுத்தனர்.. பின்னர் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சிவா கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அரசு என்கிற வார்த்தை இல்லாத ஒரே கல்லூரி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மட்டும்தான். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆட்சியாளர்களால் புரபசனல் இங்கிலீஷ் கோர்ஸ் கட்டாயம் என்றும் அதில் தேர்வாகி வந்தால் மட்டுமே பட்ட படிப்பை முடிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தது. மேலும் அந்த வகுப்பை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் அல்லாது எல்லா ஆசிரியர்களும் பாடம் எடுத்து வந்தனர். இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதுகுறித்து நான் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்.பின்னர் பல்கலைக்கழக மாநியக்குழு இது குறித்து விசாரித்தது. கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த சுமை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலாம் உலக போரில் உயிர்நீத்த தியாகிகள் போர் நினைவு சின்னத்தை (பச்சம்பேட்டை வளைவு லால்குடி மாந்துறை) பராமரிக்க தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன். தற்போது அதனை புதுப்பிக்க வரைபடத்தை வெளியிட்டு புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்றார்.