திருச்சி மலைக்கோட்டை கோயில் விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்
திருச்சி மலைக்கோட்டை கோவில் விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்காக 14 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முதல் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று ராட்சத கொழுக்கட்டை படையல் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது. இதில் மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 30 கிலோ எடையுள்ள 60 கிலோ அளவிலான கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு கோவிலுக்கு வெளியே, சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உள்ள உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூல கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி என 12 நாட்கள் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
13 ஆம் நாளான இன்று மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் கணபதிக்கு மாணிக்க விநாயகர், மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம் மூலம் பழ வகைகள், மற்றும் அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதைத்தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.