திருச்சி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 36 இருசக்கர ரோந்து வாகனங்கள்

திருச்சி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 36 இருசக்கர ரோந்து வாகனங்களை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-01 12:45 GMT

திருச்சி மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக இருசக்கர  ரோந்து வாகனங்களை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் 36 ரோந்து காவலர்களுக்கான இருசக்கர வாகனங்களை மத்திய மண்டல போலீஸ்  ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில், டி.ஐ.ஜி. சரவண சுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட பீட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. ஆகியோரின் ஒத்துழைப்போடு திருச்சியில் முதன்முறையாக 36 இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்த குற்றங்களின் அடிப்படையில் எந்தப் பகுதியில் அதிக குற்றங்கள் நடைபெற்றது என ஆய்வு செய்து அந்தப் பகுதிகளில் கூடுதலாக பீட் ரோந்து வாகனங்கள் செல்லும்.

குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப் படுத்துவதற்கும் இந்த ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதைப்போல அந்தந்த பகுதிகளுக்கு இந்த ரோந்து வாகனம் செல்லும் போது பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும்படி ஆரஞ்சு கலரில் ஒளிரும் ரிப்ளை ஜாக்கெட், சிகப்பு மற்றும் நீல நிற சைரன் என உள்ள இந்த ரோந்து வாகனங்கள் மூன்று ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரோந்து செல்லும் பொழுது அப்பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்தால், உடனடியாக அந்த புகாரை பெற்று காவல் நிலைய ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் விற்பனை செய்யும் பெரிய கடைகளில், கடை உரிமையாளர்களே சி.சி.டி.வி. கேமரா வைக்கவும், சிறிய கடைகளில் காவல்துறை சார்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News