பாசஞ்சர் ரயில்களை இயக்க கோரி,திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு

பாசஞ்சர் ரயில்களை இயக்க கோரி திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2021-09-14 08:30 GMT

பாசஞ்சர் ரெயில்களை இயக்க கோரி திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் மனு கொடுப்பதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வந்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட குழு தலைவர் சுரேஷ், செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் இன்று காலை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம், சாதாரண பாசஞ்சர் பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்த மனுவில் கொரோனா பேரிடரால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட போது மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பயணங்களுக்காக பயன்படுத்தும் சாதாரண பாசஞ்சர் பயணிகள் ரயில் இன்னும் இயக்கப்படாத நிலையே உள்ளது. இதனால் பெரும்பகுதி மக்கள் சொல்லொணா சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மத்திய அரசும், ரயில்வே துறையும் மிகவும் குறைந்த கட்டணத்தில் எளிய மக்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் சாதாரண பயணிகள் ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரிலேயே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கேன்சர் உள்ளிட்ட அரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், தேசிய அளவில் விருது பெற்றவர்கள், 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் போன்றோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்த அனைத்து கட்டண சலுகைகளும் மறுக்கப்படுகிறது.

ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் நெருக்கடியில் இருக்ககூடிய மக்களிடம், இருப்பதையும் பறிப்பதாகவே மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையில் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருதுகிறது. எனவே ரயில்களை ஏற்கனவே இயங்கிய பெயர்களில் இயக்கவும், ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்கவும் வேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Tags:    

Similar News