திருச்சி அருகே குண்டூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு ஆகிய சுவாமிகளுக்கு செல்லாயி அம்மன் என்ற பெயரில் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு முதல் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடந்தது.
இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதற்காக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வந்து கோவில் மூலவரின் கோபுர விமானத்தின் கலசங்களுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது. கருடன் கோவிலை சுற்றிவர மேள, தாளங்கள் முழங்க, வாண வேடிக்கை முழங்க, ஏனைய பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று இரவு மாபெறும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை முதல் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜையும் நடைபெற உள்ளது.