திருச்சி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி மாயம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள எண்டோஸ்கோப்பி கருவி மாயமாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;

Update: 2021-04-23 07:15 GMT

திருச்சியில் கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரிக்கு என்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, என்டோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் இருந்த எண்டோஸ்கோப்பி கருவி திடீரென மாயமாகி உள்ளது. குடல், காது, மூக்கு, தொண்டை பகுதி பரிசோதனைக்காக அறுவை சிகிச்சை கூடத்தில் பயன் படுத்தப்பட்ட இந்த எண்டோஸ்கோப்பி கருவி மாயமாகி இருப்பது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு எண்டோஸ்கோப்பி கருவி ஒன்றும் மாயமானது. இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட நாட்களில் பதிவாகியிருந்த காட்சிகள் அழிந்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து எண்டோஸ்கோபி கருவியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News